by Vignesh Perumal on | 2025-08-18 02:50 PM
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு ஆதரவாகப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேவர் பேரவை என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், "கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்! முக்குலத்தோரை குறி வைத்து வேட்டையாடும் நோக்கில், எங்கள் தென்பாண்டி சிங்கம் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களின் மீது அமலாக்கத்துறையை ஏவும் அதிமுக - பாஜக கூட்டணியை வன்மையாக கண்டிக்கின்றோம்!" என்று வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்கள், அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான அமலாக்கத்துறை சோதனையை அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளான அதிமுக - பாஜக கூட்டணியின் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சிப்பதாக அமைந்துள்ளது.
இந்த போஸ்டர்கள், அமைச்சர் ஐ. பெரியசாமியை ஒரு சமூகத்தின் அடையாளமாகக் காட்ட முயற்சி செய்வதாகவும், இந்த சோதனையை சாதி ரீதியாக அணுகுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தச் சோதனைகளை எதிர்த்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பும் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டிருப்பது அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை சோதனைகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இந்த சோதனைகள், தமிழக அரசியல் களத்தில் கடுமையான மோதல்களையும், புதிய கூட்டணி வியூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....