by Vignesh Perumal on | 2025-08-18 01:32 PM
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ₹62,000 பணம் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பேக்கரி கடையின் உரிமையாளர், இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த சுமார் ₹62,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், கொள்ளையர்கள் தங்களது அடையாளங்கள் பதிவாகாமல் இருப்பதற்காக, கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த வாரம் அய்யலூர் பகுதியில் 5 கடைகளில் இதேபோன்று பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில், தற்போது வடமதுரையில் நடந்த சம்பவம், அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கொள்ளைச் சம்பவங்களால் கலக்கமடைந்துள்ள வியாபாரிகள், "மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாகத் தலையிட்டு, இந்த கொள்ளையர்களைக் கைது செய்து, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி- மோகன் கணேஷ் திண்டுக்கல்.