by Vignesh Perumal on | 2025-08-18 12:45 PM
பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் அந்தப் பட்டியலை இன்று வெளியிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பீகாரில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அவர்களின் வசிப்பிடம், வயது மற்றும் பிற விவரங்கள் சரிபார்க்கப்படாமல் நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், தேர்தல் ஆணையம், "வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களைச் சட்டப்படி வெளியிட வேண்டிய அவசியம் இல்லை" என்று வாதிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஆதார் கார்டுகளை வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் இணைப்பது தொடர்பாகப் பல சர்ச்சைகள் உள்ளன. இந்த விவகாரத்தில், ஆதார் கார்டுகளை ஆதாரமாகக் கொண்டு வாக்காளர் நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார், ஏன் நீக்கப்பட்டனர் என்ற விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக, பீகார் மாநிலத் தேர்தல் ஆணையம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்போது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம், பீகாரின் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளன.
ஆசிரியர்கள் குழு....