by Vignesh Perumal on | 2025-08-18 10:27 AM
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையின் முக்கிய மையமாக சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், வரி ஏய்ப்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவாகப் பிரிந்து இந்தச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள், கணினித் தகவல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சமீப காலமாக, கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட் மற்றும் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்களின் அடிப்படையில், வருமான வரித்துறை இந்த சோதனையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சோதனைகளின் முடிவில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சோதனைகளின் மூலம் எவ்வளவு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் பின்னர் வெளியாகும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்