by Vignesh Perumal on | 2025-08-17 04:00 PM
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கடந்த மூன்று நாட்களாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் நகரம் வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நகருக்குள் நுழைவதற்கு வழக்கமாக 15 நிமிடங்கள் ஆகும் நிலையில், இன்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. நகருக்குள் நுழைந்த பிறகும், பிரதான சாலைகளில் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் எரிச்சலடைந்தனர். போக்குவரத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறினர்.
கொடைக்கானல் நகரில் மட்டுமல்லாமல், மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி போன்ற மலைக் கிராமங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால், உள்ளூர் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
பெருமாள்மலையிலிருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி, உகார்தே நகர், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி மற்றும் ஏரிச்சலை போன்ற அனைத்து முக்கியச் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. தொடர் விடுமுறை முடிய இன்னும் ஒரு நாள் உள்ளதால், வரும் நாட்களிலும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்