by Vignesh Perumal on | 2025-08-17 03:53 PM
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், பொது மற்றும் கட்டண தரிசன வரிசைகள் நிரம்பி வழிகின்றன.
ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். வழக்கமாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக இன்று கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இதனால், பொது மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும் வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்தனர். கோவிலின் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிலில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு, அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்