by Vignesh Perumal on | 2025-08-17 03:42 PM
ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஆகஸ்ட் 19 அன்று ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரையை ஒட்டி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசப் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாக வங்கக்கடலில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நேரடியாகப் பாதிக்காது. இருப்பினும், அதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையைக் கடக்கும் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்