by Vignesh Perumal on | 2025-08-17 02:57 PM
காதல் திருமணம் செய்துகொண்ட மகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை, மேலூர் அருகே கார் ஏற்றி இளைஞரைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த பொட்டப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (23) மற்றும் ராகவி (21) ஆகியோர் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ராகவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, இருவரும் திருமணம் செய்து கொண்டு திருச்சியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், ராகவியின் தந்தை தனது மகள் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிச் சென்றதாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் சதீஷ்குமார் மற்றும் ராகவி இருவரையும் விசாரணைக்காக மேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.
காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பிறகு, சதீஷ்குமாரும் ராகவியும் இருசக்கர வாகனத்தில் திருச்சியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ராகவியின் உறவினர்கள், அய்யாபட்டி நான்கு வழிச்சாலையில் வைத்து, அவர்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராகவி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ராகவியின் உறவினர்களைத் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதியில் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.