by Vignesh Perumal on | 2025-08-16 06:56 PM
திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவர் திடீரென தனது வீட்டில் இருந்து வெளியே வந்து தொண்டர்கள் மத்தியில் கை அசைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால், நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில், சுமார் 10 மணி நேர சோதனைக்குப்பின் அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டின் வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தார்.
அப்போது, வீட்டின் வெளியே குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் கை அசைத்தார். அவரைப் பார்த்த தொண்டர்கள், மேலும் உற்சாகமடைந்து முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் தொண்டர்களுக்கு கை அசைத்த சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்குள் சென்றார். இது தொண்டர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் ஐ. பெரியசாமிக்குச் சொந்தமான சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் அவரது மகள், திண்டுக்கல் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள ஐ.பி. செந்தில்குமார் அறையில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "இந்த சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, திமுகவினர் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்