by Vignesh Perumal on | 2025-08-16 03:06 PM
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் 40 ஆண்டுகளாகக் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மலை மீது ஏறி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காமயகவுண்டன்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்களும், கூலித் தொழிலாளர்களும் வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்று கைகளால் கல் உடைத்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக, ஒரு சில தனி நபர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக இந்த கல்குவாரியை நடத்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, புலிகள் சரணாலயப் பகுதியில் வெடி வைத்து பாறைகளை உடைத்து, கனரக இயந்திரங்கள் (ஹிட்டாச்சி) மூலம் கனிம வளங்கள் எடுக்கப்பட்டு, தினமும் கேரள மாநிலத்திற்கு ஜல்லிக் கற்கள், உடை கற்கள், எம்-சாண்ட், பி-சாண்ட் போன்றவை கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத கல்குவாரியை உடனடியாகத் தடை செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் குவாரியை முற்றுகையிட்டு, மலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், "ஏழை எளிய மக்களைக் கல் உடைக்க விடாமல், பெரிய முதலாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும். தலைமுறை தலைமுறையாகக் கல் உடைத்து வரும் எங்களைப் போன்றவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டவிரோத கல்குவாரி குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
ஆசிரியர்கள் குழு.....