by Vignesh Perumal on | 2025-08-16 02:52 PM
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், திமுகவினர் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது பாஜக அரசின் வாடிக்கையாகி விட்டது. நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த வாக்கு திருட்டு என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்புவதற்காகவே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.
"பாஜக தனது அரசியல் எதிரிகளை மிரட்டி, அவர்களை தங்கள் கட்சியில் இணைத்து, பின்னர் அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று வருகிறது. இது ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. ஆனால், திமுகவினர் அப்படிப்பட்ட கோழைகள் அல்ல. பாஜகவின் வாஷிங் மெஷினில் நாங்கள் கழுவப்பட மாட்டோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அமலாக்கத்துறை சோதனைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். பிரதமர் மோடியின் மிரட்டலுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொண்டு, எங்களது நேர்மையை நிரூபிப்போம். திமுக தலைவர்களும், தொண்டர்களும் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்துவிட மாட்டார்கள்" என்றார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் சோதனை நடந்து வரும் நிலையில், இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள ஐ.பி. செந்தில்குமார் அறையில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசியல் மோதல்கள் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்