by Vignesh Perumal on | 2025-08-16 02:23 PM
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தலாம் என்ற தகவலையடுத்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல், அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னை பசுமைச் சாலையில் உள்ள அவரது இல்லம், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள அவரது அறை, திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவரது மகள் இந்திரா, திண்டுக்கல் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் வீடுகள் அடங்கும்.
இந்த சோதனையின்போது, சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள அமைச்சரின் அறையிலிருந்து ஒரு சாவி கைப்பற்றப்பட்டதாகவும், இது சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படலாம் என்ற தகவல் பரவியதால், தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் அலுவலகக் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இந்த சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில் மேலும் பல விவாதங்களை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்