by Vignesh Perumal on | 2025-08-15 07:32 PM
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான இல. கணேசன் (80) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
கடந்த வாரம் சென்னை வந்திருந்த இல. கணேசன், தனது வீட்டில் கால் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து தேசிய அளவில் உயர்ந்த முக்கிய பாஜக தலைவர்களில் இல. கணேசன் குறிப்பிடத்தக்கவர். சிறுவயது முதல் ஆர்.எஸ்.எஸ்-ல் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், பின்னர் பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
தமிழக பாஜக மாநில தலைவராக திறம்பட செயல்பட்டார். பாஜகவின் தேசிய செயலாளர் மற்றும் தேசிய துணைத் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும், பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
இல. கணேசன் ஒரு சிறந்த பேச்சாளராகவும், கட்சித் தொண்டர்களுடன் எளிமையாக பழகக்கூடியவராகவும் அறியப்படுகிறார். அவரது மறைவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இல. கணேசன் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு, தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு என்று தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இல. கணேசனின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்