by Vignesh Perumal on | 2025-08-15 01:12 PM
மதுரை - சென்னை இடையே மக்கள் பயணிக்க பெரிதும் உதவக்கூடிய வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், இன்றுடன் 48 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாகத் திகழ்ந்த இந்த ரயிலின் பிறந்தநாளை, மதுரை ரயில் ஆர்வலர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
மதுரை ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில், வைகை எக்ஸ்பிரஸின் எஞ்சின் அலங்கரிக்கப்பட்டு, ரயில் ஆர்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
1977-ஆம் ஆண்டு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் முதல் ஓட்டுநர்களாகப் பணியாற்றியவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் வரலாறு, அதன் சாதனைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துக்கூறப்பட்டது. ரயில் என்ஜினுக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் ரயிலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ், மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயில் என்ற பெருமையை உடையது. தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு பகலில் விரைவாக செல்ல விரும்பும் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதன் சரியான நேரத்தில் இயங்கும் தன்மை, விரைவான சேவை மற்றும் சிறந்த வசதிகளுக்காக இது "தென்னக ரயில்வேயின் ராஜா" என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
இன்றைய கொண்டாட்டம், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, தென் தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு உணர்வுப்பூர்வமான அடையாளம் என்பதைக் காட்டுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்