by Vignesh Perumal on | 2025-08-14 12:56 PM
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தூய்மைப் பணியாளர்களின் கண்ணீருக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
கொரோனா காலத்தில் சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்த தூய்மைப் பணியாளர்களை, வாக்குறுதிகளைக் கேட்கப் போராடியபோது, நள்ளிரவில் அடக்குமுறை ஏவி அடித்து நொறுக்கி, பல்வேறு இடங்களில் சிறை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக விரோதிகளா? "அவர்கள் சமூக விரோதிகளோ, குண்டர்களோ, நக்ஸலைட்டுகளோ இல்லையே, ஏழை எளிய மக்கள்தானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தூய்மைப் பணியாளர்களோடு டீ, காபி அருந்துவது போல் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஸ்டாலினுக்கு, இப்போது அவர்கள் வாக்குறுதியைக் கேட்கும்போது கசக்கிறதா என்றும் அவர் வினவியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எந்த வழக்கு இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று கடிதம் எழுதியதை நினைவுபடுத்தி, அப்போது நாடகமாடினாரா என்றும் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
"79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த அரசும் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை ஏவியதில்லை" என்று கூறியுள்ள பழனிசாமி, தூய்மைப் பணியாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
"தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையைத் தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமில்லை. இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளன" என்று கூறி, தி.மு.க. அரசை எச்சரித்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்