by Vignesh Perumal on | 2025-08-14 06:44 AM
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு வெளியே கடந்த 13 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் பி.எஃப். போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காததால், போராட்டம் நீடித்து வந்தது.
போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யத் தொடங்கினர். முதலில் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் மறுத்ததால், வலுக்கட்டாயமாகக் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
இந்த நடவடிக்கையின்போது, சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. போராட்டக்காரர்கள் சிலர் எதிர்ப்பைத் தெரிவித்ததால், ஒரு அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, ரிப்பன் மாளிகை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்தப் போராட்டம் மற்றும் கைது நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்