by Vignesh Perumal on | 2025-08-12 08:54 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட மோதலால், இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேனி, திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கெங்குவார்பட்டி பேரூராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி, திமுகவைச் சேர்ந்த பட்டியலினப் பெண் ஆவார். துணைத் தலைவராக மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஞானமணி பதவி வகிக்கிறார். கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டிமந்தை சாலையில் ரூ.1.18 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த ஒப்பந்தப் பணியை, பேரூராட்சித் துணைத் தலைவரின் உறவினர்கள், முறையான பணி ஆணை (work order) பெறாமல் தொடங்கியுள்ளனர். இதை அறிந்த பேரூராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் 13-வது வார்டு உறுப்பினர் ராஜவேல் ஆகியோர், பணி நடைபெறும் இடத்திற்குச் சென்று, பணி ஆணையின்றி வேலையைத் தொடங்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பணியைத் தடுத்து நிறுத்தியதால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளரும், துணைத் தலைவரின் மகனுமான ஸ்டீபன் ஆகியோர், தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் உறுப்பினர் ராஜவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைவர் தமிழ்ச்செல்வியின் ஆதரவாளர்கள் தேனி - திண்டுக்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தலைவரின் ஆதரவாளர்கள், துணைத் தலைவரின் மகன் ஸ்டீபனை தாக்கியதாகக் கூறி, அவரது ஆதரவாளர்கள் கொடைக்கானல் சாலையில் மற்றொரு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவின் இரு பிரிவினரும், சமூகரீதியாகவும் இரு இடங்களில் நடத்திய இந்த சாலை மறியல் போராட்டத்தால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் சீராளன் (பொறுப்பு) தலைமையிலான காவல்துறையினர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதலில் காயமடைந்த பேரூராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் உறுப்பினர் ராஜவேல் ஆகியோர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், துணைத் தலைவரின் மகன் ஸ்டீபனும், தாம் தாக்கப்பட்டதாகக் கூறி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சரியான நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து, இரு தரப்பினரும் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தச் சம்பவம், கெங்குவார்பட்டி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்-தி.முத்துக்காமாட்சி