by Vignesh Perumal on | 2025-08-12 08:32 PM
உலக ஜெனிவா ஒப்பந்த தினத்தையொட்டி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருவாரூர் மாவட்டக் கிளை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் இணைந்து கொரடாச்சேரியில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கொரடாச்சேரி ஜே.ஆர்.சி. ஒன்றிய கன்வீனர் கி. தீபன், பேரணியின் நோக்கம் குறித்து விளக்கி, அனைவரையும் வரவேற்றார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நீடாமங்கலம் வட்ட அமைப்பாளர் அன்பு வே. வீரமணி, ரெட் கிராஸ் உறுதிமொழியை வாசித்தார். திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அவர் மாணவர்களுக்கு மஞ்சப்பைகள், குடிநீர் மற்றும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
வெண்ணவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, பிரதான சாலைகள் வழியாகச் சென்று கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கொரடாச்சேரி வட்ட பொறுப்பாளர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சௌந்தரராஜன் மற்றும் கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலர் சோ. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியின் நிறைவு நிகழ்வில், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தி. ராஜேஸ்வரி மாணவர்களை வாழ்த்தினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருவாரூர் மாவட்டக் கிளைத் தலைவர் ஆர்.எஸ். ராஜ்குமார், செயலாளர் ஜெ. வரதராஜன், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பேரணியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும், கொரடாச்சேரி இந்தியன் ரெட் கிராஸ் பொறுப்பாளர் எஸ்.எம்.பி. துரைவேலன் குளிர்பானம் மற்றும் ரொட்டிகள் வழங்கினார். மேலும், மாவட்டப் பயிற்றுநர் ஜெ. ஜெயந்தி மரக்கன்றுகளை வழங்கினார். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், அனைத்துப் பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக, திருவாரூர் மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனர் இரா. செந்தில்குமார் நன்றி தெரிவித்தார். செட்டிச்சிமிழி பள்ளி மாணவர்கள் பறை இசை முழக்கத்துடன் பேரணியை மேலும் உற்சாகப்படுத்தினர்.
திருவாரூர் மாவட்ட நிருபர் - சுப இளங்கோ அலைபேசி எண் 9943665959