by Vignesh Perumal on | 2025-08-10 12:30 PM
சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 10, 2025) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கத் தலைமைப் பதவிகளுக்காகவும், செயற்குழு உறுப்பினர்களுக்காகவும் பல்வேறு சின்னத்திரை நடிகர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில், பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தென்னிந்திய சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்றுவருகின்றன. இச்சங்கத்தில் சுமார் 2,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
மொத்தம் 23 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்குப் பல நடிகர்கள் போட்டியிடுகின்றனர்.
தலைவர் பதவிக்கு நடிகர்கள் சிவன் சீனிவாசன் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும்.
சின்னத்திரை சங்க உறுப்பினரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் உழைக்கும் நல்லவர்களுக்கு எனது வாக்கைப் பதிவு செய்துள்ளேன். சின்னத்திரை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தலின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு....